நவீன முறையில் கன்றுகள் பராமரிப்பு
பிறந்த கன்றுகள் பராமரிப்பு: கன்று பிறந்ததும் நாசிப்பகுதியில் ஒட்டியிருக்கும் சளி போன்ற திரவத்தை சுத்தமான துணியால் துடைத்து, சுவாசிப்பதற்கு உதவ வேண்டும். கன்றின் தொப்புள் கொடியை 3 செ.மீ. நீளம் விட்டு முடிச்சுப் போட்டு, முடிச்சிற்குக் கீழ் சுத்தமான புது கத்திரியால் வெட்டிவிட வேண்டும். பிறகு அந்தப்பகுதியில் டிங்சர் அயோடின் தடவ வேண்டும். கன்று பிறந்தவுடன் மூச்சுத் திணறினால் விலாப்புறத்தினை அழுத்திவிட வேண்டும் அல்லது குளிர்ந்த தண்ணீரை கன்றின் மேல் தெளிக்க வேண்டும். பிறந்த கன்றினை தாய்ப்பசுவைக் கொண்டு நக்கவிட வேண்டும். தாய்ப்பசு, கன்றை நக்கும் உணர்வுடன் இல்லாவிடில் சிறிதளவு உப்புத் தண்ணீரைக் கன்றின் மேல் தெளித்துப் பின் தாய்ப்பசுவை நக்கவிட வேண்டும். நல்ல திடமுள்ள கன்று பிறந்த அரை மணி நேரத்தில் எழுந்து நிற்கும். அப்படி எழுந்த நிற்க கஷ்டப்பட்டால் நாம் உதவி செய்ய வேண்டும். குளம்பின் நுனியில் ஜவ்வுப் பாகத்தைக் கிள்ளி அகற்றிவிட்டால் கன்று சிரமமில்லாமல் நிற்கும். கன்று பிறந்தவுடன் பசுவிடமிருந்து பிரித்து வளர்க்க வேண்டும். இப்படி பிரித்து வளர்ப்பதால் பசுவின் பால் உற்பத்தியைக் கணக்கிட முடியும். மேலும் பிறந்தவுடன் கன்று இறந்துவிட்டால் பசுவின் பால் உற்பத்தி குறையாமல் சுத்தமான பாலை துரிதமாகப் பெறலாம். கன்றுகளைத் தாய்ப்பசுவிடமிருந்து பிரித்து வளர்த்தாலும் முதல் உணவாகச் சீம்பால்தான் கொடுக்க வேண்டும். (பிறந்த அரை மணி நேரத்திற்குள்) சீம்பாலைக் குடிப்பதால் கன்றுகள் நோய் எதிர்ப்பு சக்தி பெறுவதுடன் அவற்றிற்கு நல்ல மலமிளக்கியாகவும் விளங்குகிறது. கன்றுகளைத் தனியாகப் பிரித்து வளர்ப்பதால், அவற்றிற்குப் பால் தேவையான அளவு, குறிப்பிட்ட இடைவெளியில் கொடுக்க வேண்டும்.
ஒரு கன்றின் உடல் எடையில் 10 சதவீதம் பாலை 15 நாட்கள் கொடுக்க வேண்டும். வயிற்றுப்போக்கோ கழிச்சலோ ஏற்பட்டால் பாலின் அளவை கணிசமாகக் குறைக்க வேண்டும். கன்றுகள் பால் குடித்தவுடன் அவற்றின் நாக்கில் சிறிதளவு உப்பைத் தடவ வேண்டும். இதனால் இளம் கன்றுகள் ஒன்றை ஒன்று நக்கும் பழக்கம் நின்று, உரோமம் வயிற்றுக்குள் செல்லாமல் தடுக்கலாம். தாயிடமிருந்து பிரிந்து வளரும் கன்றுகளுக்கு முதல் 5 வாரங்களுக்கு பால் மிகவும் அவசியம். 5 வாரங்களுக்கு மேல் பாலுக்குப் பதிலாக வெண்ணெய் நீக்கப்பட்ட மோரினைக் கொடுக்கலாம். கன்றுகளுக்கு ஆரம்பகால கலப்புத் தீவனமும், இளம்பசும்புல்லும் இரண்டாவது வார முடிவிலிருந்து கொடுக்கலாம். கன்றுகளுக்கு தொழுவம் வசதியாகவும், வெளிச்சமாகவும், காற்றோட்டம் உள்ளதாகவும் இருக்க வேண்டும். ஒவ்வொரு கன்றுக்கும் 10 ச.அடி இடம் தேவை. கன்றுகள் தொழுவத்தில் ஓடித்திரிய 30 ச. அடி இடம் தேவை. தொழுவத்தின் தரை மற்றும் சுவர்களை 3 மாதத்திற்கு ஒரு முறை சுண்ணாம்பு வைத்து சுத்தம் செய்ய வேண்டும்.
தொழுவத்தில் உப்புக் கட்டிகளைக் கட்டி தொங்கவிட வேண்டும். இதன்மூலம் கன்றுகள் தமக்கு வேண்டிய தாது உப்புகளை பெற்றுக்கொள்ளும். கன்றுகளுக்கு 2 மற்றும் 10வது வார வயதில் குடற்புழு நீக்க மருந்து கொடுக்க வேண்டும். பின் மாதம் ஒரு முறை குடற்புழு நீக்க மருந்து கொடுக்க வேண்டும். கன்றுகளுக்கு 10-15 நாட்களுக்குள் கொம்பைச்சுட்டுவிட வேண்டும். பொதுவாக ஏற்படும் நோய்களான அடைப்பான், தொண்டை அடைப்பான், சப்பை நோய், கோமாரிநோய், கருச்சிதைவு நோய் போன்றவற்றிற்கு கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி தடுப்பு ஊசிகள் போட்டுக்கொள்ள வேண்டும்.