காளான் உற்பத்தி – விவசாயியின் அனுபவம்

காளான் உற்பத்தி செய்வது என்பது ஒரு கடினமான வேலையில்லை. காளான் உற்பத்தி செய்ய ஓரளவுக்கு படித்திருந்தாலே போதும். வருடம் முழுவதும் உற்பத்தி செய்யலாம். ஆனால் கோடை காலத்தில் 30 -40% மகசூல் குறைவாக கிடைக்கும்.E_1282646424
சிப்பிக்காளான் கடல் சிப்பியின் தோற்றமுடையதாய் இருப்பதால்தான் இவற்றுக்கு இந்த பெயர் வந்தது. பொதுவாக சிப்பிக் காளானில் வைட்டமின் பீ அதிகமாக இருப்பதால் இதயம் சம்பந்தமான நோய்களை குணப்படுத்துகிறது. வைட்டமின் பீ-ல் உள்ள போலிக் ஆசிட் அதில் இருப்பதால் ரத்தசோகை நோய்க்கு நல்லது. நார்ச்சத்து உள்ளதால் நாம் உண்ணும் உணவுகள் நன்றாக செரிமானம் அடைய நிவாரணியாக செயல்படுகிறது. வயிற்றுப்புண்களை குணப்படுத்துகிறது. வயோதிகப்பருவத்தில் ஏற்படும் கால் மூட்டுவலிகளை மிக அற்புதமாக சிப்பிக்காளான் குணப்படுத்துகிறது. சிறந்த கண்பார்வைக்கும் எலும்புகளின் வளர்ச்சிக்கும் பற்களின் உறுதிக்கும் தேவையான தாமிர, இரும்பு சத்துகளுடன் கூடிய கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற தாதுக்களும் காளானில் உள்ளன. ஒரு மனித உடலுக்கு எவை எவை எநத எந்த அளவுக்கு தேவைப்படுமோ அந்த அளவிற்கு சத்துப் பொருட்கள் சிப்பிக்காளானில் உள்ளது. எனவே சிப்பிக்காளான் ஒரு முழுமையான உணவாகும். சிறியவர் முதல் பெரியவர் வரை சிப்பிக்காளானை வாரம் இருமுறை உணவில் சேர்த்து உண்ணலாம். சிப்பிக்காளானை அடிக்கடி உணவில் சேர்த்து உண்பதால் வயோதிகப்பருவத்தை தள்ளிப்போடுகிறது. இளமையை அள்ளித்தருகிறது.
வைக்கோல் தயாரிப்பு: காளான் வளர்ப்பதற்கு நெல் வைக்கோலைக் கொண்டு உருளை படுக்கைகள் தயாரிக்க வேண்டும். புதிய நெல் வைக்கோலை 5 செ.மீ. நீளத்திற்கு வெட்டி, 4-5 மணி வரை நீரில் ஊறவைக்க வேண்டும். பிறகு வைக்கோலை நன்கு கொதிக்கும் நீரில் ஒரு மணிநேரம் வேகவிட வேண்டும். பின் வைக்கோலை அகற்றி உலர்த்திக் கொள்ள வேண்டும்.
காளான் படுக்கை தயாரித்தல்: 2க்கு 1 அடி அளவுக்கு 80 காஜ் கனமுள்ள பாலிதீன் பைகளில் அடுக்கு முறையில் காளான் விதையிடப்பட்ட படுக்கைகள் தயாரிக்கப் படுகிறது. பாலிதீன் பையின் அடிப்பகுதியை சணலால் கட்டி அதை உள்பக்கமாக திருப்பிவிட வேண்டும். பையின் அடிப்பகுதியில் 5 செ.மீ. உயரத்திற்கு வைக்கோல் துண்டுகளை பரப்பி அதன் மேல் 30 கிராம் காளான் வித்தை தூவ வேண்டும். இதே போல் 4 அடுக்குகள் தயாரித்து மேல்பகுதியில் 5 எச்.மீ. வைக்கோல் பரப்பி, பையின் வாய்பகுதியை சணலால் இறுக்க கட்டவேண்டும். பாலிதீன் மையப்பகுதியில் பென்சில் அளவுள்ள 5-10 துளைகள் போடவேண்டும்.
காளான் வித்து பரவும் முறை: மேற்கூறிய முறையில் தயாரிக்கப்பட்ட உருளைப் படுக்கைகளை வயரில் கட்டி தொங்கவிட வேண்டும். படுக்கையில் பூசண விதைகள் பரவுவதற்கு 15 நாட்கள்ஆகும். பின் படுக்கைகளைக் காளான் தோன்றும் அறைக்கு மாற்ற வேண்டும்.
காளான் அறை: காளான் பூசணம் முழுமையாக பரவி ஒரு வாரத்திற்குள் பையைக் கிழித்துக்கொண்டு வெளியே வரும். காளான் மொட்டு தோன்றிய மூன்று நாட்களில் பெரியதாகிவிடும். அவற்றை அறுவடை செய்த பின் பாலிதீன் பையை நீக்கிவிட வேண்டும். அறையின் வெப்பநிலை, ஈரப்பதத்தை தேவையான அளவு பராமரிக்க மணலில் தண்ணீர் தெளிக்கவும்.
காளான் அறுவடை: காளான்களை அறுவடை செய்தபின் படுக்கைகள் மீது தண்ணீர் தெளிக்க வேண்டும். ஒரு வார இடைவெளியில் மீண்டும் காளான் அறுவடைக்கு வரும். இதுபோல் 3 முறை அறுவடை செய்யலாம். ஒரு படுக்கை தயார் செய்ய 500 கிராம் வைக்கோல் பயன்படுத்தினால் 900  கிராம் மகசூல் கிடைக்கும். மேற்கூறிய முறையில் காளான் வளர்ப்பு செய்து அதிக மகசூல் பெற்று விவசாயிகள் பயனடையலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.