இந்தியாவில் ஆச்சர்யப்படுத்தும் பெண் விவசாயிகள்..!

உலக வங்கியின் கணக்கின்படி, உணவுப் பொருட்களின் உற்பத்திக்காக வேலை செய்வது தொடங்கி, அவற்றை விளைவித்து, உணவாக மாற்றுவது வரை செய்யப்பட்டும் வேலைகளில் 43 சதவீதம் பங்கு கிராமப்புற பெண்களுடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மனதில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15-ஆம் தேதி உலக கிராமப்புற பெண்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

உலக வெப்பமயமாதல்,தட்பவெட்ப நிலை மாறுபாடு,இயற்கை பேரிடர்கள் ஆகியவற்றின் காரணமாக உணவுப்பாதுகாப்பு என்பது உலகின் மிக முக்கிய பிரச்சனைகளில் ஒன்றாக உருவாகியுள்ளது. குறிப்பாக இந்தியாவில் இந்த பிரச்சனை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. உலகின் உணவுப்பாதுகாப்பில் கிராமப்புற பெண்களின் பங்கு அளப்பது என்பதால், அவர்கள்தான் இந்த பிரச்சனையை தீர்ப்பதற்கான ஒரே வாய்ப்பு என நம்பப்படுகிறது.

உலக கிராமப்புற பெண்கள் தினத்தையொட்டி, இந்திய விவசாயத்தில் குறிப்பிடத்தக்க சாதனை புரிந்த மூன்று பெண்களின் வெற்றிக்கதைகளை இங்கே பார்க்கலாம்.

ரிதா கமிலா:

4-1-rita-kamila

உலகிலேயே அதிக அளவு தட்பவெட்ப நிலை மாறுபாடுகள் கொண்டுள்ளதாக கருதப்படும் மேற்கு வங்காளத்தின் சுந்தர வனக்காடுகளில் ஒரு சிறந்த தற்சார்பு விவசாயியாக உருவாகியுள்ளார் ரிதா கமிலா. தன்னுடைய நிலத்தில் விவசாயம் மட்டுமல்லாமல் கால்நடை வளர்ப்பையும் மேற்கொண்டு மற்ற விவசாயிகளுக்கு ஒரு முன்னுதாரணமாக மாறியுள்ளார். இத்தனை வேலைகளையும் தனி ஒரு மனுஷியாக இருந்து சாதித்துள்ளார் ரிதா.

சில ஆண்டுகளுக்கு முன்னர் தன்னுடைய நிலத்தை இயற்கை விவசாயத்திற்கு மாற்றிய ரிதா, தற்போது அதில் பல்வேறு வகையான பயிர்களை விளைவித்து வருகிறார். கூட்டு வேளாண்மை என்ற தத்துவத்தை பின்பற்றி, தன்னுடைய நிலத்தில் விவசாயம் மட்டுமின்றி, கால்நடைகள் மற்றும் மீன்களை வளர்த்து வருகிறார்.

இதுமட்டுமல்லாமல் கால்நடை மற்றும் மீன்களின் கழிவுகளிலிருந்து எரிவாயு தயாரிக்கும் அமைப்பையும் தனது நிலத்தில் அமைத்துள்ளார். இந்த எரிவாயுவை சமையலுக்காகவும், பயிர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அளிக்கவும் பயன்படுத்தி வருகிறார். இவரின் இந்த முயற்சியால், இவரின் குடும்பம் ஆண்டு முழுவதும் வயிறார உணவு உண்கின்றனர். அருகிலுள்ள விவசாயிகளும் ரிதாவை பார்த்து கூட்டு வேளாண்மைக்கு மாறி வருகின்றனர்.

அட்ராம் பத்மா பாய்:

4-2-atram-padma-bai

சுமார் 2,000 விவசாயிகளைக் கொண்ட கிராம பஞ்சாயத்தைச் சேர்ந்த பத்மா பாய், அந்த பகுதியில் பருத்தி மற்றும் எண்ணெய் வித்துக்களை விளைவிக்கும் ஒரே விவசாயி ஆவார். மூன்று ஏக்கர் நிலத்தைக் கொண்டுள்ள அவர், கடந்த 2013-ஆம் ஆண்டு, விவசாய கருவிகளை வாங்க உதவி செய்யும் ஒரு அமைப்பிடம் 30,000 ரூபாய் கடன் பெற்றார்.

இதன் பிறகு அந்த அமைப்பின் உதவியோடு களத்தில் இறங்கிய அவர், வாங்கிய பணத்தைக் விவசாயத்தில் வேளைப்பளுவைக் குறைக்கும் புது வகையான கருவிகள் வாங்க முதலீடு செய்தார். இந்த விவசாய கருவிகளை அதிக விலை கொடுத்து வாடகைக்கு எடுக்க முடியாத ஏழை விவசாயிகளை அணுகி, அவர்களுக்கு நியாயமான கட்டணத்தில் வாடகைக்கு அளித்தார்.

இதன் மூலம் கிடைத்த லாபத்தைக் கொண்டு இரண்டு கான்கிரீட் சாலைகளும், மழை மற்றும் வெயிலால் பாதிக்கப்படாத மண் சாலையையும் அமைத்துள்ளார். மேலும் அரசிடம் நிதியுதவியை பெற்று மழை நீர் சேமிப்புக் குளங்களை வெட்டி, அதன் மூலம் தேங்கும் நீரை சுத்தகரித்து அருகில் உள்ள அரசுப்பள்ளிக்கு நல்ல குடிநீர் கிடைக்க வழிவகை செய்துள்ளார்.

மேடக் மாவட்ட பெண் விவசாயிகள் கூட்டமைப்பு:

4-3-women-farmers-of-medak

தெலங்கானா மாவட்டம் மேடக் மாவட்டத்தைச் சேர்ந்த சில பெண் விவசாயிகள் இணைந்து, வறட்சியால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மகராஷ்டிர மாநிலம் விதர்பா பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளுக்கு வறட்சியிலும் லாபகரமாக விவசாயம் செய்வதற்கான வழிமுறைகளை கற்றுத் தந்து வருகின்றனர். இன்று விதர்பா பகுதி விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்றி வரும் இவர்கள், ஒரு காலத்தில் சொந்த நிலம் கூட இல்லாமல் விவசாயக் கூலிகளாக காலத்தைக் கழித்தவர்கள்.

ஆனால் தக்காண மேம்பாட்டு கழகம் என்ற அமைப்பின் உதவியால் விவசாயத்தில் உள்ள பிரச்சனைகளை வெற்றிகரமாக எதிர்கொண்டு வரும் இவர்கள், வித்தியாசமான இயற்கை வழிகள் மூலம் கூடுதலாக லாபம் ஈட்டி வருகின்றனர்.

பாரம்பரிய விதை பாதுகாப்பு முறைகளை பின்பற்றி பாதுகாக்கப்பட்ட விதைகளை ,தங்கள் பகுதிகளைச் சேர்ந்த மற்ற விவசாயிகளுக்கு பண்டமாற்று முறையில் அளித்து வருகின்றனர். ”தரமான விதைகளை தேர்ந்தெடுத்து, அவற்றை மண்பாண்டங்களில் பாதுகாக்கிறோம். இந்த மண்பாண்டகளின் உள்ளே வேம்பு இலைகள், சாம்பல் மற்றும் காய்ந்த புற்கள் ஆகியவை மூன்று அடுக்குகளாக இருக்கும். பின்னர் அந்த பானையை மண்ணால் பூசி, காயவைத்து பாதுகாப்பான இடத்தில் வைத்து விடுவோம்.

பின்னர் இந்த விதைகளை அருகிலுள்ள 30 கிராமங்களுக்கு கொண்டு செல்வோம்.அங்குள்ள விவசாயிகளுக்கு இயற்கை விவசாய முறைகளையும், வறட்சியை தாக்குப்பிடிக்கும் குறுந்தானியங்கள் போன்ற பயிர்களை வளர்ப்பது குறித்தும் கற்றுத் தருவோம்.” என மேடக் பெண்கள் விவசாயக்குழுவின் தலைவர் சந்திராம்மா கூறுகிறார்.

இவர்களில் யாரும் பள்ளிகள் பக்கம் எட்டிப்பார்க்கவில்லை என்றாலும், தாங்கள் மற்றவர்களுக்கு கற்றுத்தரும் ஒவ்வொரு விவசாய முறைகளையும் ஆவணப்படங்களாக படம்பிடித்து வைத்துள்ளனர். இதுதவிர சங்கம் என்ற சமுதாய வானொலியை தொடங்கி அதன் மூலம் சுற்றுப்புறத்தில் உள்ள 200 கிராமங்களுக்கு இயற்கை வேளாண்மை குறித்தும் திறன் வேளாண்மை குறித்து கற்றுத்தந்து வருகின்றனர்.

நன்றி: http://www.thebetterindia.com/71745/india-women-farmers-international-day-of-rural-women/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.