வீட்டு செடிகளுக்கு நீர் வார்க்கும் புதிய யுக்தி
வீடுகளில் தோட்டத்தை அமைத்துப் பராமரித்து வருவது பல இடங்களில் நடைமுறையில் இருக்கும் விஷயமாகும். அந்தத் தோட்டத்தில் விளையும் காய்கனிகளைச் சமையலுக்குப் பயன்படுத்துவது தற்போதைய நாகரிகமாகவும் இருந்து வருகிறது. வீட்டுத்தோட்டத்தை அமைப்பதும் அதை முறையாகப் பராமரிப்பதும் ஒரு கலை. அது பொழுதுபோக்கு என்ற நிலையையும் தாண்டி நமது உடலுக்கும், மனதுக்கும் உற்சாகத்தை தருகிறது. ஆதலால் பலவிதப் பொழுதுபோக்குகளில் வீட்டுத் தோட்டம் அமைப்பது ஒரு முக்கியமான இடத்தைப் பெறுகிறது.
வீடுகளில் குளிர்ச்சி
வீட்டை ஒட்டியிருக்கும் காலியிடம், வீட்டு மொட்டை மாடிகள், மற்றும் தொட்டிகளில் வளர்க்கும் செடிகொடி வகைகள் ஆகியவை வீடுகளுக்குள் குளிர்ச்சியான சூழ்நிலையை ஏற்படுத்தி வைக்கின்றன. அறைகளுக்குள் இருக்கும் அலங்காரச் செடிகள் கண்களுக்கும், இடத்திற்கும் குளிர்ச்சியை அளிக்கின்றன.
வீட்டுத்தோட்டம் என்றாலும்கூட அதிலும், முறையான சரியான கால இடைவெளிகளுக்கு உட்பட்ட பராமரிப்புகள் அவசியம் தேவைப்படுகிறது. அவ்வப்போது தொழு உரங்களை வாங்கி இடவேண்டும். பழைய காய்ந்த கிளைகளையும், இலைகளையும் உடனுக்குடன் அகற்றியாக வேண்டும். வீட்டிற்கு வெளியேயுள்ள தோட்டம் என்றால் பாத்திகள் அமைப்பது, நீர் விடுவது, சரியான உயரங்களில் செடிகளைப் பராமரிப்பது என்ற வேலைகள் இருக்கும். அதுவே வீட்டுக்கு உள்ளேயுள்ள செடிகள் அல்லது கொடிகள் என்றால் நீர் விடுவது மற்றும் பூச்சிகள் வரவிடாமல் செய்வது என்ற பராமரிப்புகள் அமையும்.
நீர் வார்க்க புதிய முறை
நகர்ப்புற அடுக்கு மாடிகளில் வசிப்பவர்கள் அல்லது தனி வீடுகளில் குடியிருப்பவர்கள் வெளியூருக்குச் செல்லும்போது அவர்கள் வளர்க்கும் செடிகொடி வகைகளுக்கு நீர் விட முடியாமல் போகிறது. அந்தச் சிக்கலுக்குத் தீர்வாக ஒரு புதிய உத்தி இருக்கிறது.
அதாவது, காலியான ஒரு பிளாஸ்டிக் வாட்டர் பாட்டிலை எடுத்துக்கொண்டு அதைச் சுற்றிலும், தண்ணீர் சொட்டுப்போடும் அளவுக்கு சிறுசிறு துளைகளை போட்டுக்கொள்ள வேண்டும். அந்த பாட்டிலை நமது தோட்டத்தில் இருக்கும் செடிகளுக்கு அருகில் பூமியில் ஒரு சிறிய குழியைத் தோண்டி அதன் வாய் பாகம் மேலே இருக்குமாறு அக்குழியில் புதைத்து வைக்க வேண்டும்.
அந்தப்பாட்டிலில் தண்ணீரை நிரப்பும்போது, அந்தப் பாட்டிலில் இருக்கும் சிறுசிறு துளைகள் வழியாகத் தண்ணீர் மெல்லமெல்ல வெளியேறும். அவ்வாறு வெளியேறும் நீரானது செடியின் வேரை சுற்றிலும் ஈரப்பதத்தை உண்டாக்கும். அதை செடியின் வேர்கள் உறிஞ்சிக்கொள்வதன் மூலம் அதன் நீர்த் தேவையானது குறுகிய கால தேவையை பூர்த்தி செய்ய ஏதுவாகும். அவ்வாறு புதைத்து வைக்கும் பாட்டிலின் அளவிற்கேற்ப செடிக்கு தேவையான நீரை நாள்கணக்கிலோ, வாரக்கணக்கிலோ பயன்படுத்திக்கொள்ளலாம். வீட்டுக்குள் வளர்க்கும் பூந்தொட்டிகளிலும்கூட இம்முறையைக் கடைபிடித்து நாம் வீட்டில் இல்லாத நிலையிலும் செடிகளுக்கான நீர்த்தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளலாம்.