விண்ணை தொடும் சேலத்துக்காரர்!
சேலத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் இன்று இந்திய விமானங்களுக்குத் தேவையான ரப்பர் பொருட்களை உற்பத்தி செய்யும் பிசினஸில் இந்தியாவில் முக்கியமான நபராக உயர்ந்திருக்கிறார் என்பது ஆச்சரியமான தகவல்தானே!
சென்னை எம்ஐடி கல்லூரியில் டிப்ளமோ இன் ரப்பர் டெக்னாலஜி படித்த ஆர்.சுந்தரம், எப்படி இந்திய விமானங்களுக்கான பொருட்களைத் தயாரிக்கும் பிசினஸை வளர்த்தெடுத்தார் என்ற சுவாரஸ்யமான பயணத்தைப் பற்றி அவரிடம் பேசியபோது பகிர்ந்துகொண்டார்.
“1980-களில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு அவ்வளவு இல்லாத காலகட்டத்தில் நான் கல்லூரி முடித்தேன். நான் கல்லூரியில் படித்துக் கொண்டி ருக்கும்போதே என்னுடைய தந்தை இறந்துவிட்டார். எனக்கு ஒரு அண்ணன், நான்கு சகோதரிகள். நான்தான் கடைக்குட்டி. அதுவும் நான் படித்தது முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட ரப்பர் டெக்னாலஜி. எங்கள் கல்லூரியிலிருந்து முதல் பேட்ச்சில் வெளிவந்தது 16 பேர். எங்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பது சிரமமாகவே இருந்தது. எங்களுடைய கல்லூரி மேலாளர் டாக்டர் நடராஜனும் எங்களை தொடர்ந்து ஊக்கப்படுத்தினார். நான் தொடர்ந்து முயற்சி செய்துகொண்டே இருந்ததால், கல்லூரி இறுதித் தேர்வு நடந்து கொண்டிருக்கும்போதே ஆந்திராவில் ஒரு நிறுவனத்தில் வேலை கிடைத்தது. நான்கரை வருடங்கள் பணிபுரிந்தேன். ஆனாலும் எனக்குள் இருந்த பிசினஸ் ஆர்வம் அடங்கவில்லை.
சொந்த ஊரிலேயே தொழில்!
என் சொந்த ஊரான சேலத்துக்கே திரும்பினேன். 1988-ல் நானும், மனோகரன் என்ற நண்பரும் இணைந்து, மத்திய அரசின், தேசிய சிறு தொழில் மேம்பாட்டுக் கழகத்திடமிருந்து 4 லட்ச ரூபாய் கடன் உதவி பெற்று எலாஸ்டோ-மெரிக் இன்ஜினீயர்ஸ் என்ற ரப்பர் பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனத்தை தொடங்கினோம். ஆரம்பத்தில் பிஹெச்இஎல் நிறுவனத்துக்கு ரப்பர் பொருட்களையும், கேஸ்கட்களையும் சப்ளை செய்துகொண்டிருந்தோம்.
நான்தான் எங்கள் தலைமுறையிலேயே முதன்முறையாக தொழில் செய்ய புறப்பட்டவன். பிசினஸ் என்பது நமக்கு சுதந்திரமான உணர்வை கொடுத்தாலும், ஒரு இடத்தில் வேலைப் பார்ப்பதைக் காட்டிலும் எளிதான விஷயமல்ல; மாறாக கடினமானது. கஷ்டங்களையும் தோல்விகளையும் சந்திக்க வேண்டி வரலாம். ஆனால், அந்த ரிஸ்க்கை எடுக்க நான் தயாராக இருந்தேன். தொடர்ந்து பல விஷயங்களைக் கற்றுக்கொள்ளும் ஆர்வம் எனக்குள் தீராமல் இருக்கும். பல செமினார்கள், கருத்தரங்குகளில் தவறாமல் கலந்து கொள்வேன். அப்படி கலந்துகொண்ட ஒரு கருத்தரங்குதான் என் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியது.
அந்த ஒரு ஐடியா!
1993-94-களில் ஏவியேஷன் செமினார் ஒன்றில் கலந்துகொண்டபோது, “விமானங்களுக்கான பல பொருட்களை இந்தியா இறக்குமதிதான் செய்துகொண்டிருக்கிறது. இந்தியாவிலேயே இவை உற்பத்தி செய்யப்பட்டால், அதைவிட வேறு நற்காரியம் இருக்க முடியாது. திறமையும் வாய்ப்புகளும் இந்தியாவில் கொட்டிக் கிடக்கிறது. அதை நாம்தான் கண்டுகொள்வதில்லை” என்பதை உணர்ந்தேன். அப்போது விமானங்களுக்கான ரப்பர் பொருட்களை நாம் இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய வேண்டும் என்று தீர்மானித்தேன். ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் மற்றும் டிஆர்டிஓ என்று சொல்லப்படும் இந்தியப் பாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் உதவியுடன், விமானங்களுக்குத் தேவையான ரப்பர் பொருட்களைத் தயார் செய்யும் தொழில்நுட்பங்களை யும், சர்வதேச தர நிர்ணய அளவு களையும் தெரிந்து கொண்டேன்.
விண்ணை தொட்ட பிசினஸ்!
என் படிப்பும், அனுபவ அறிவும் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனங்கள் கற்றுக் கொடுத்த தொழில்நுட்பத்தையும் வைத்து முழுமூச்சுடன் இறங்கினேன். 2000-ல் ‘‘தி ஏரோ பார்க்” நிறுவனத்தைத் தொடங்கினேன். தமிழகத்தில் தொடங்கப்பட்ட முதல் ஏரோபார்க் இதுதான். இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுவந்த விமானத்தின் காக்பிட் ரப்பர் சீல், விமானம் தரையிறங்கும்போது ஏற்படும் அழுத்தத்தை 14 விநாடிகள் தாங்கும் விதத்தில் இருந்தது. ஆனால், நாங்கள் உருவாக்கிய காக்பிட் ரப்பர் சீல் 65 விநாடிகள் அழுத்தத்தைத் தாங்கும் வகையில் இருந்தது. இந்தியப் போர் விமானமான சூரியகிரான் விமானத்தில் அது பயன்படுத்தப்பட்டது. இங்கிலாந்திலிருந்து இறக்குமதி ஆகிவந்த ஒரு பொருளை சேலத்தில் அதை விடச் சிறந்ததாக உருவாக்கியது எங்களுடைய முதல் வெற்றி.
அதைத் தொடர்ந்து 2011-ல் ‘ஏரோஸ்பேஸ் இன்ஜினீயர்ஸ்’ என்ற பெயரில் புதிதாக ஒரு உற்பத்தி நிறுவனத்தை உருவாக்கினோம். தற்போது ஏறக்குறைய விமானங்களுக்கான 14 ஆயிரம் பொருட்களை உற்பத்தி செய்து வருகிறேன். இந்தியாவின் அனைத்து சிவில், போர் விமானங்களில் எங்களுடைய காக்பிட் சீல்தான் உள்ளது. அதுமட்டுமல்லாமல், இந்திய ராக்கெட்டுகள் ஏவப்படும்போது, நாங்கள் உருவாக்கும் வைப்ரேஷன் ஐசோலேட்டர்கள் மீதுதான் நின்றுகொண்டிருக்கும். இத்தனைக்கும் இவற்றை உருவாக்கும் பணியில் டிரெய்னிங் கொடுக்கப்பட்ட பத்தாவதுகூட படிக்காத நம்மூர் மக்கள்தான் பணிபுரிகிறார்கள். படிப்பைவிட அனுபவம் கற்றுத் தருவதுதான் அதிகம். ஆனால் எதைச் செய்தாலும் கச்சிதமாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பேன். தற்போது ஜெர்மனி, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறேன். இப்போது வருடத்துக்கு ரூ.25-30 கோடி டேர்ன் ஓவர் செய்கிறோம். எங்களுடைய பிசினஸை மேலும் விரிவுபடுத்த ஓசூரில் ஒரு உற்பத்தி நிலையமும், அமெரிக்காவில் ஒரு நிலையமும் அமைக்கும் பணியில் இருக்கிறோம்.
விருதுகளும் இலக்கும்!
இரண்டு பேரோடு தொடங்கிய இந்த நிறுவனம் இன்று 212 பேருக்கு வேலைவாய்ப்பைக் கொடுத்திருக்கிறது. இதுவரை பிரதமர் மோடி கொடுத்தது உட்பட பத்து தொழில்முனைவோர் விருதுகள் எங்கள் நிறுவனத்துக்குக் கிடைத்திருக்கிறது. இந்தியாவின் இறக்குமதியைக் குறைக்கும் முயற்சியில் எங்கள் நிறுவனமும் பங்காற்றியிருப்பது பெருமையளிக்கிறது.
ஆனால், இந்திய ஏரோஸ்பேஸ் துறையில் 60-70 சதவிகிதம் இறக்குமதிதான். அதை முடிந்தவரை குறைக்கும் முயற்சியில் இருக்கிறோம். இதற்காக 10 – 12 பேர் அமரும் வகையிலான ஒரு விமானத்தை வடிவமைத்து வருகிறோம். இன்னும் ஐந்து ஆண்டுகளில் 1,000 – 1,500 விமானங்கள் இந்தியாவின் தேவையாக உள்ளது. அந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதே எங்கள் இலக்கு” என்று பெருமிதத்துடன் கூறினார்.
படிப்படியான வளர்ச்சியில் சுந்தரம், இன்று விமானத்தையே வடிவமைக்கும் அளவுக்கு உயர்ந்திருப்பதைக் கண்டு, நாம் பெருமைப்படலாம்!
கற்றுக்கொள்ளுங்கள்!
இளைஞர்களுக்கு வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. தொழில் வாய்ப்புகளைத் தேடி கண்டுபிடிக்க மெனக்கெட வேண்டும்.
அரசுத் தரப்பில் இருந்து பிசினஸ்க்காக வழங்கப்படும் கடன் மற்றும் இதர உதவிகளைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
துணிந்து ரிஸ்க் எடுக்க வேண்டும். எந்தத் தருணத்திலும் பின்வாங்கக் கூடாது.
இறக்குமதி செய்யப்படும் பொருட்களைக் கண்டறிந்து இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய முடிந்தால் பிசினஸில் எளிதில் வெற்றி பெறலாம்.
நாம் செய்யும் பிசினஸ் தொடர்பான புதிய விஷயங்களைத் தொடர்ந்து கற்றுக்கொள்ள வேண்டும்.
Source form: vikatan.com