உளுந்து பயிரைத் தாக்கும் மஞ்சள் தேமல் நோய்

கோடை உளுந்து சாகுபடியாளர்களின் கவனத்திற்கு…
உங்கள் உளுந்து பயிரில் இளம் இலைகளில் மஞ்சள் நிற தேமல் போன்ற அறிகுறிகள் காணப் படுகின்றனவா என்று கவனியுங்கள். மஞ்சள் தேமல் நோய் தாக்குதலுக்கு உட்பட்ட பயிரின் இலைப்பரப்பில் முதலில் சிறிய புள்ளிகள் தோன்றி படிப்படியாக மஞ்சள் நிறப் படலங்களாக மாறிவிடும். உளுந்து சாகுபடியில் மஞ்சள் தேமல் நோய் மிக முக்கியமானதாகும்.E_1281436616
இந்த நோயானது உளுந்தை மட்டுமின்றி பச்சைப்பயறு, துவரை மற்றும் சோயா மொச்சை போன்றவற்றை தாக்கி மகசூல் இழப்பை ஏற்படுத்தும். இந்த நோயின் அறிகுறிகளான மஞ்சள் நிற தேமல் படலங்கள் முதன் முதலில் இளம் இலைகளில்தான் காணப்படும். இந்த நோயின் பாதிப்புக்குட்பட்ட பயிர் முதிர்ச்சியடைய காலதாமதமாகும். மேலும் குறைந்த அளவே பூக்கள் மற்றும் காய்களைக் கொண்டிருக்கும். காய்கள் சிறிய அளவிலும் உருமாறியும் காணப்படும். மஞ்சள் தேமல் நோயானது செடியின் குறைந்த வயதில் (பூக்கும் முன்) தாக்கும்பொழுது பயிரானது காய் பிடிக்காமலேயே இறந்துவிடும் வாய்ப்புள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட செடிகளை உடனே பிடுங்கி அழிப்பதன்மூலம் இந்நோய் பரவாமல் சிறிதளவு தவிர்க்க முடியும். இந்த கொடிய நச்சுயிரி நோய் வெள்ளை ஈ மூலம் பரவுகின்றது.
கட்டுப்படுத்த: மஞ்சள் ஒட்டுப்பொறி: வெள்ளை ஈக்கள் நடமாட்டத்தினை கண்காணிக்க நெடுஞ்சாலை மஞ்சள் நிறம் பூசப்பட்ட டப்பாக்களில் விளக்கெண்ணெய் தடவி ஏக்கருக்கு ஐந்து என்ற அளவில் பயிர் மட்டத்தில் குச்சிகளில் கவிழ்த்து வைக்க வேண்டும். ஏக்கருக்கு 200 மில்லி டைமீத்தோயேட் அல்லது மானோகுரோட்டோபாஸ் என்ற பூச்சிக்கொல்லியினை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்த முடியும். மருந்துக்கரைசல் பயிரின் பாகங்களில் நன்கு பரவிப் படிவதற்காக வேளாண்மைக்கான திரவ சோப்புகளான சாண்டோவிட், இன்ட்ரான் போன்றவற்றுள் ஏதேனும் ஒன்றினை ஒரு லிட்டர் மருந்து கரைசலுக்கு கால் மில்லி வீதம் சேர்த்துக் கலக்கிக் கொள்ள வேண்டும். 10-15 நாட்கள் கழித்து மீண்டும் மருந்து தெளிக்க வேண்டும். கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க பயிரின் வளர்ச்சியினைப் பொறுத்து ஏக்கருக்கு 200 லிட்டர் வரை மருந்துக்கரைசல் தேவைப்படும்.
ந.முருகேசன், பேராசிரியர் மற்றும் தலைவர், பருத்தி ஆராய்ச்சி நிலையம், ஸ்ரீவில்லிபுத்தூர்-626 125.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.