இயற்கை வேளாண்மையில் கத்தரி சாகுபடி

காய்கறி சாகுபடியில் இயற்கை முறை நுட்பங்களை கடைபிடித்தல்: தற்போது நாம் செய்யும் காய்கறி சாகுபடியில் முக்கியமானது கத்தரி சாகுபடி. இது பூச்சிகளால் கடுமையாக பாதிக்கப்படுகின்றது. இயற்கை சம்பந்தமான உரங்கள் மற்றும் நுண்ணுயிர்கள் கத்தரி சாகுபடிக்கு எப்படி உதவுகின்றது என்பதை இக்கட்டுரையில் ஆராயப்பட்டுள்ளது.E_1282060019

இயற்கை முறை சாகுபடி: சாகுபடிக்கு முதலில் தேவைப்படுவது நாற்றங்கால். இதன் பரப்பு 25 அடிநீளம், 4 அடி அகலம், 4 அங்குலம் உயரம் கொண்டதாக இருக்க வேண்டும். நாற்றங்காலுக்கு 500 கிலோ நன்கு மக்கிய தொழு<உரம் இடவேண்டும். இதோடு இயற்கை உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா இவைகளை ஒரு கிலோ வீதம் போடவேண்டும். காய்கறி செடிகளில் தோன்றும் மிகக்கொடிய வாடல் நோயினைக் கட்டுப்படுத்த டிரைக்கோடெர்மா விரிடி என்னும் இயற்கை சம்மந்தப்பட்ட பூசணக் கொல்லி ஒரு கிலோ அளவினை நாற்றங் காலுக்கு இட்டு மண்ணினை நன்கு கொத்திவிட வேண்டும். ஒரு ஏக்கருக்கு 200 கிராம் விதை விதைக்க வேண்டும். நாற்றங்காலைத் தொடர்ந்து நடவு வயல் தயாரிப்பதற்கு நல்ல கவனம் தரவேண்டும். நடவு வயலில் நல்ல வடிகால் வசதி உண்டாவதற்காக உளி கலப்பை கொண்டு உழவேண்டும். பிறகு நன்கு மக்கிய தொழு உரம் 15 டன் போட்டு நிலத்தை உழுது பார்சால் போடவேண்டும். (இரண்டரை து 2 அடி) நாற்றங்காலில் இருந்து நல்ல திடமான 28 நாள் வயதுடைய நாற்றினை எடுத்து நடவு வயலில் நடவேண்டும். (பாருக்கு பார் இரண்டரை அடி, செடிக்கு செடி 2 அடி). நடவு நட்ட 21, 42, 63, 84 ஆகிய நாட்களில் ஒவ்வொரு முறையும் ஒரு டன் மக்கிய தொழு உரம், ஒரு கிலோ பாஸ்போபேக்டீரியா, ஒரு கிலோ டிரைகோடெர்மா விரிடி இவைகளைக் கலந்து வயலில் இட்டு பாசனம் செய்ய வேண்டும். செடிகளுக்கு கவனமாக பயிர் பாதுகாப்பு செய்ய வேண்டும். நடவு நட்ட மூன்று வாரம் கழித்து மாதம் இருமுறை உயிர் பூச்சிக்கொல்லி மருந்துகளான பவேரியா, பாசியானாவை ஒரு லிட்டர் தண்ணீருக்கு மூன்று மில்லி அளவு கலந்து தெளிக்க வேண்டும். இந்த மருந்தானது செடிகளைத் தாக்கும் காய்ப்புழுக்களுக்கு வியாதியை உண்டாக்கி கடுவிரைவில் அவைகளை மடியச் செய்துவிடுகின்றது. இதைத் தொடர்ந்து இலைகளுக்கும் தண்டுகளுக்கும் பூக்களுக்கும் ஏற்படும் பூச்சிகளின் சேதத்தைத் தவிர்க்க வாரம் ஒரு முறை பைட்டோபிராட் என்னும் இயற்கை பூச்சி விரட்டியை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 மில்லி அளவு கலந்து தெளிக்கவும். இந்த இரண்டு இயற்கை மருந்துகளும் வெகு சிறப்பாக செயல்பட்டு விவசாயிகள் விஷ மருந்துகளை உபயோகிப்பதிலிருந்து காப்பாற்றுகின்றன. வளரும் செடிகளுக்கு காலத்தில் பாசனம் செய்ய வேண்டும். இயற்கை முறையை அனுசரிக்கும்போது பாசன செலவில் மிச்சம் ஏற்படும். பாசன நீர் கிரகிக்கப்பட்டு பூமி உலர்ந்தவுடன் ஆட்களை வைத்து கத்தரி செடிகø சுற்றி பூமியைத் தளர கொத்திவிட வேண்டும். உடனே மக்கிய தொழு உரத்தை பூமிக்கு இட்டு பாசனம் செய்யலாம். விவசாயிகள் தாங்கள் சேகரித்துள்ள தொழு உரத்தை அவ்வப்போது மேலே விவரித்தபடி செடிகளுக்கு இட்டுவர வேண்டும். இதனால் செடிகள் வெகு செழிப்பாக வளர்ந்து வருகின்றன. மேற்கண்ட பணிகளை கவனத்தோடும் நம்பிக்கையோடும் செய்யும்போது கத்தரி செடிகள் நட்ட 75வது நாளிலிருந்து 120 நாட்கள் வரை அறுவடை கொடுத்துக் கொண்டிருக்கும். ஒரு ஏக்கரில் 65 கிலோ கொண்ட மூடை 135 கிடைக்கும். இயற்கை முறை சாகுபடியில் ஏக்கருக்கு ஆகும் செலவு ரூ.22 ஆயிரம் ஆகும். காய்கள் விற்பனையில் வரவு ரூ.68 ஆயிரம் கிடைக்கும். சாகுபடி செலவு போக ஏக்கரில் நிகர லபாம் ரூ.46 ஆயிரம் கிடைக்கும்.

ரசாயன உரம் மற்றும் பூச்சி மருந்து அடிக்கும் சாகுபடி முறையில் சாகுபடி செலவு அதிகரித்துக்கொண்டே வரும். ஆனால் கத்தரி மகசூல் அதிகரிக்காது. இயற்கை முறை சாகுபடி தொடர்ந்து செய்யும்போது சாகுபடி செலவு படிப்படியாக குறைந்துவிடும். ஆனால் கத்தரி மகசூல் அதிகரிக்கும். இதனால் சாகுபடியில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். இனி எதிர்காலத்தில் நீண்டகால சாகுபடிக்கு இயற்கை முறை சாகுபடிதான் ஏற்றது. அந்த இயற்கை முறை சாகுபடிக்கு சக்தியைக் கொடுப்பது நுண்ணுயிர்களும் உ<யிர் உரங்களும் ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.